தமிழக காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் 21,000 ரவுடிகள்

2 mins read
d46158a0-4d59-4cca-8784-15bd6b8fb9d4
தேர்தலில் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருச்சியில் வியாழக்கிழமை காவல்துறையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. - படம்: ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் காவல்துறையின் கண்காணிப்பு தீவரமடைந்துள்ளது.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 21,000 ரவுடிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க இயலும் என்றும் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப்படையினரும் ஈடுபடுவர் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ரவுடிகள் கண்காணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் முன்பே வலியுறுத்தி இருந்தது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலைச் சேகரிக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக இந்து தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 21,000 ரவுடிகள் இடம்பெற்றுள்ள பட்டியலை காவல்துறை தயார் செய்துள்ளதாகவும் அதில் ரவுடிகளின் முக்கியமான விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ரவுடிகளில் எத்தனை பேர் திருந்தி வாழ்கின்றனர், தற்போது சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, தலைமறைவாக இருப்பவர்கள், பிணை பெற்று வெளியே வந்திருப்பவர்கள் எனப் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாராகி உள்ளது.

சில ரவுடிகளின் வீடுகளுக்கு காவல்துறையினர் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இனி எத்தகைய குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என 3,000 ரவுடிகள் காவல்துறை அளித்த உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்