வெயிலின் தாக்கத்தால் திருடிய வீட்டில் குளித்து, தூங்கி இளைப்பாறிய கொள்ளையன்

வெயிலின் தாக்கத்தால் திருடிய வீட்டில் குளித்து, தூங்கி இளைப்பாறிய கொள்ளையன்

2 mins read
028128ad-132f-4a2c-bcaf-dcdf63c5cc23
ஜெயக்குமார். - படம்: ஊடகம்

தூத்துக்குடி: வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் லட்சக்கணக்கில் பணம், நகைகளைக் கொள்ளையடித்த வீட்டிலேயே திருடன் குளித்து, தூங்கி இளைப்பாறி விட்டுச் சென்றது காலவர்களின் விசாரணையில் தெரியவந்தது.

நெல்லை மாவட்டத்தின், இட்டமொழி கிராமத்தில் பதுங்கியிருந்த திருடன் ஜெயக்குமாரை கைது செய்த காவலர்கள், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். ஜெயக்குமாரிடம் இருந்த நகை, பணத்தையும் காவலர்கள் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நீலா புஷ்பா, 60.

வீட்டில் தனியாக வசித்து வரும் இவர், நாகர்கோவில் சந்தையில் பனங்கிழங்கு வியாபாரம் செய்து வருபவர்.

வழக்கம்போல் நீலா புஷ்பா, கடந்த 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு நாகர்கோவில் சந்தை வியாபாரத்துக்குச் சென்றுவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணமும் மூன்றரை பவுன் தங்க நகைகளும் திருடு போயிருந்தது.

இதுகுறித்து நீலாபுஷ்பா தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கண்காணிப்புக் கேமராக்களையும் காவலர்கள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, நீலா புஷ்பா வீட்டில் பனங்கிழங்கை விலைக்கு வாங்கிச் சென்று விற்பனை செய்து வந்த பண்டாரபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், 46, என்பவர் இந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடந்த 23ஆம் தேதி நீலாபுஷ்பா வீட்டிற்கு வந்து பனங்கிழங்கை ஜெயக்குமார் வாங்கிச் சென்றுள்ளார்.

சற்றுநேரத்தில் நீலாபுஷ்பா வீட்டின் கதவை பூட்டிவிட்டு வியாபாரத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, மீண்டும் நீலாபுஷ்பா வீட்டிற்கு வந்த ஜெயக்குமார், கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.2 லட்சம், மூன்றரை பவுன் தங்க நகைகளைத் திருடியுள்ளார்.

அன்றைய தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், திருட வந்த வீட்டிலேயே குளித்துவிட்டு, சற்று நேரம் படுத்து இளைப்பாறியதாகவும் ஜெயக்குமார் விசாரணையின்போது தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்