ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) பாஜக கூட்டணி ஆதரவுடன் சுயேச்சையாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வருகை தந்த ஓபிஎஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் மூவர் ஓபிஎஸுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களுக்கு தனது சட்டைப் பையில் இருந்து மூன்று 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து வழங்கிவிட்டு உள்ளே சென்றார் ஓபிஎஸ்.
வாக்கு சேகரிப்பின்போது மக்களுக்குப் பணம் வழங்கக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது, ஓபிஎஸ் பணம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஓ.பன்னீர்செல்வம் பணம் கொடுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரி அருள் காணொளி ஆதாரத்துடன் அறந்தாங்கி காவல்நிலையத்தில் ஓபிஎஸ் மீது புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், லஞ்சம் கொடுத்த குற்றத்திற்கான இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 171-இ உட்பட 3 பிரிவுகளின்கீழ் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப் பதிவானது.
அண்ணாமலை மீது வழக்கு
திருச்சியில் சனிக்கிழமை இரவு, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

