ஜெயலலிதா அம்மாவுடன் சிறப்பான நட்பு இருந்தது: மோடி நெகிழ்ச்சி

ஜெயலலிதா அம்மாவுடன் சிறப்பான நட்பு இருந்தது: மோடி நெகிழ்ச்சி

2 mins read
9bf0aff2-cc35-4691-a805-47b03ad12334
2011ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரைச் சந்தித்தார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கும் பிரதமர் மோடி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து அவ்வப்போது பேசி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, ‘தந்தி டிவி’க்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியிலும் ஜெயலலிதா பற்றி மோடி குறிப்பிட்டார்.

இம்முறை சற்று வித்தியாசமாக, தமக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான நட்பு குறித்து விரிவாகப் பேசினார்.

அவர் கூறுகையில், “அதிமுக எங்கள் கூட்டணியில் இல்லாத விவகாரத்தை வேறு மாதிரி பார்க்க வேண்டும்.

“ஜெயலலிதா அம்மாவுடன் 1995ஆம் ஆண்டு எனக்குத் தொடர்பு கிடைத்தது. அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார்.

“2002ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் பாஜக ஆட்சி மீது குற்றம் சுமத்தினார்கள். அப்போது எனக்கு முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

“அந்தச் சமயத்தில் ஜெயலலிதா அம்மா குஜராத்துக்கு வந்தார். நாங்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“பலர் என் மீது விமர்சனம் வைத்தபோது ஜெயலலிதா அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னை வந்து சந்தித்தார். எங்களுக்குள் அவ்வளவு நட்பு இருந்தது.

“யாருக்காவது வருத்தம் இருக்கவேண்டும் என்றால் அது அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டும்தான். எங்களுக்கு வருத்தம் ஏற்படுவதற்கான காரணம் எதுவும் இல்லை.

“ஜெயலலிதா அம்மாவின் கனவைச் சிதைக்கும் பாவம் செய்கிறவர்கள் என்ற வருத்தம் அதிமுகவினருக்குத்தான் வரவேண்டும். பாஜகவினருக்கு எவ்வித வருத்தமும் ஏற்பட எந்தக் காரணமும் இல்லை.

“பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் வலுவாக இருக்கிறது. பல சமுதாயக் குழுக்களை உள்ளடக்கிய கூட்டணி இது.

“மலர்க்கொத்து போல நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதுதான் எங்களின் பலம். மக்கள் எங்களுக்கு அளிக்கக்கூடிய வாக்கு நேர்மறையானதாக இருக்கும்.

“தேசிய அளவில் பாஜகவிற்கு ஆதரவான மனநிலை உள்ளது. தமிழ்நாட்டில்கூட அது தொடங்கி உள்ளது,” என்று மோடி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்