தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணப்பட்டுவாடா: சென்னையில் வருமான வரித்துறை சோதனை

3 mins read
ef8f1fe3-167a-40f4-9176-fcde52f2fc0d
வருமான வரித்துறை அலுவலகம். - படம்: ஊடகம்

சென்னை: சென்னை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.

வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரிலும் வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலும் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

எதிர்வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்பு உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சமயம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை, அதிக விலையுள்ள பரிசுப்பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது ரூ.109 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 16 நாள்கள் உள்ள நிலையில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பாரபட்சம் காட்டும் பட்சத்தில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் ஏராளமான ரொக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து தேர்தல் ஆணையமும் வருமான வரித் துறையும் சோதனை நடவடிக்கை மேற்கொண்டன.

மொத்தம் ஐந்து இடங்களில், செவ்வாய்க்கிழமை காலை ஏழு மணி முதல் அதிகாரிகளைக் காண முடிந்தது. ஓட்டேரி, புரசைவாக்கம், கொண்டித்தோப்பு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை வரை சோதனை நீடித்தது.

வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஐந்து தொழில் அதிபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏராளமான மின்னணுச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தப் பொருள்களை மொத்தமாக வாங்கி விநியோகிக்கும் தொழிலை அத்தொழில் அதிபர்கள் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு அந்தப் பொருள்கள் மொத்த விலையில் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பொருள்களை வாக்காளர்களுக்கு விநியோகிக்க வாங்கி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் வீட்டில் கோவையில் இருந்து வந்த வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் இருந்து பல லட்சம் ரொக்கப்பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் சில அரசியல் கட்சியினர் இப்போதே பணப்பட்டுவாடாவை தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுத்த பின் தங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் சத்தியம் வாங்குவதாகவும் தகவல் பரவி வருகிறது.

முன்பு தேர்தலின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய இரு நாள்களில்தான் பணப்பட்டுவாடா நடைபெறும். அப்போது சோதனை நடவடிக்கைகள் தீவிரமடையும்.

ஆனால், இம்முறை அரசியல் கட்சியினர் இப்போதே பணப்பட்டுவாடாவை தொடங்கி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்துடன் வருமான வரித்துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்