தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் விவகாரம்: திரைப்பட இயக்குநர் அமீரிடம் விசாரணை

1 mins read
200409a7-0eb7-491d-91f9-bb9c5fb2c7df
இயக்குநர் அமீர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் அமீர் விசாரணைக்காக முன்னிலையானார்.

அவரிடம் தேசியப் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு போதைப் பொருள்களை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் கைதாகியுள்ளார்.

அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள நண்பர்கள், பிரமுகர்களிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாஃபரின் கூட்டாளி சதா என்பவரும் கைதானார்.

இந்நிலையில் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு திரைப்பட இயக்குநர் அமீருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அமீருக்கும் ஜாஃபர் சாதிக்குக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து சில தொழில்களை செய்து வருவதாகவும் தெரிகிறது.

இத்தகைய தகவல்கள் குறித்து விசாரணையின்போது அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தலின் பின்னணி மற்றும் அதற்கான பணப்பரிவர்த்தனை குறித்தும் அமீரிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே எத்தகைய விசாரணையையும் தம்மால் எதிர்கொள்ள முடியும் என்றும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்துச் சொல்லப் போவதாகவும் அமீர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்