தேர்தல் பிரசாரத்துக்கு கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள்; தடைவிதிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து

தேர்தல் பிரசாரத்துக்கு கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள்; தடைவிதிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து

1 mins read
30e47f92-f68e-41ca-9de2-a4a81d16e577
பிரசார கூட்டங்களில் குழந்தைகளுடன் பெண்கள். - படங்கள்: ஊடகம்

சென்னை: தமிழகத் தேர்தல் களத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கைக்குழந்தை களையும் தாய்மார்கள் அழைத்து வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இவ்வாறு குழந்தைகளை அழைத்து வருவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு சிறார்களை அழைத்து வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பிரசாரத்தில் பங்கேற்கும் கட்சியினருக்கு கணிசமான தொகை வழங்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் கைக்குழந்தையுடன் பிரசாரத்தில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படுவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்கின்றனர்.

அப்போது, வேட்பாளர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்புவது, கட்சிக் கொடியை தூக்கிப்பிடிப்பது, குழந்தைகளை பாட வைப்பது என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட குழந்தைகள் பல்வேறு வகையிலும் அவதிப்பட நேர்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள் வாடி வதங்கி விடுகின்றனர். அதிக பணம் கிடைக்கும் என்பதால் பிரசார கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து வருவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தைகளுடன் பிரசாரத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு மூன்று மணி நேரத்துக்கு ரூ.500 வரை கிடைப்பதாகத் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்