தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் தகிக்கும் வெயில், தவிக்கும் மக்கள்

2 mins read
61192e99-ee39-4baa-939d-307ea8545416
கொளுத்தும் வெயில். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை முதல் (ஏப்ரல் 03) முதல் 5 நாட்களுக்கு 106 பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

அடுத்த 5 நாட்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 106 பாரன்ஹீட் வெப்பமும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 102 பாரன்ஹீட் வெப்பமும், கடலோரப்பகுதிகளில் 99 பாரன்ஹீட் வெப்பமும் இருக்கக்கூடும் என்று அது கூறியது.

ஈரோட்டில் மட்டுமே 41.1 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகி உள்ளது.

கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 41.1 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துகிறது என்று மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து 40 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவே பதிவாகி வருகிறது.

காலை 7 மணிக்கெல்லாம் வீசத் தொடங்கும் வெயிலின் தாக்கம் இரவு 7 மணி வரை நீடித்து வருகிறது.

மதிய நேரத்தில், நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. வீடுகள், அலுவலகங்களில் மின்விசிறி இயங்கினாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல்காற்றே வீசுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் குளிர்பானங்களை பருகி வருகின்றனர். கரும்பு, பால், மோர், இளநீர், தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான பொருட்களின் வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்