சென்னை: உலகின் மிகப்பெரியளவிலான ஜனநாயக தேர்தலான இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியம் (சிபிஐசி), வருமானவரித்துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள், கடத்தப்பட்ட பொருள்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு வார காலமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் சென்று உள்ளன. இதனால் பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தமிழகம் முழுவதும் முக்கிய கட்சியை பிரமுகர்களை வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வாக்காளர்களுக்குபணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக ஒவ்வொரு தேர்தலின்போதும் தேசிய அளவில் புகார் எழுந்து வருகிறது. எனவே, இம்முறை தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு, பறிமுதல் நடவடிக்கைகளை முன்கூட்டியே தீவிரமாக மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படைகள் தீவிர காவல் பணிகளில் ஈடுபட்டு வாகன சோதனை உள்ளிட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8.78 கோடி மதிப்பிலான 13 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி நகைகளை புதன்கிழமை (ஏப்ரல் 3) தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) ஒரே நாளில் நடந்த சோதனையில் முக்கிய கட்சி பிரமுகர்கள் அவரது உறவினர்கள் வீடுகள் நிறுவனங்களில் இருந்து கணக்கில் வரா ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சென்னையில் கொண்டித்தோப்பு, ஓட்டேரி உட்பட 5 இடங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் 2.60 கோடி ரூபாயும், சேலத்தில் ரூ.70 லட்சமும், திருச்சியில் ரூ. 55 லட்சமும் வாகனச்சோதனையில் ரூ. 40 லட்சம் என நான்கு கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல் கணக்கில் வராத பணமாக இருப்பதால் பணப்பட்டுவாடா செய்வதற்காக பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு தொடர்பான வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும் வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியாகப் பல இடங்களை ரகசியமாகக் கண்காணித்து வருவதாகத் தேர்தல் ஆணைய கூறியது. இதேபோன்ற சோதனைகளை அடுத்தடுத்த நாள்களில் தொடரத் திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடைபெற்றது.
ரூ.50,000 மேல் பணம் எடுத்துச் செல்ல வணிகர்கள் அனுமதி கோரிய கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.