தமிழகத்தில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 3 மடங்கு அதிகரிப்பு

1 mins read
eaed683a-b027-4dbe-aa52-33181636acdd
தமிழ்நாட்டில் சி-செக்சன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. - படம்: இணையம்

சென்னை: தமிழ்நாட்டில் சி-செக்சன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன என்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 விழுக்காடு பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன என்றும் அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சென்னை ஐஐடியின் மானுடவியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறையைச் சோ்ந்த ஆய்வாளர்கள் வா்ஷினி நீதிமோகன், டாக்டா் கிரிஜா வைத்தியநாதன், ஸ்ரீஷா, பேராசிரியா் வி.ஆா்.முரளிதரன் ஆகியோர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 2016 முதல் 2021 வரை பிரசவ சிகிச்சை குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வுத் தரவுகளை முன்வைத்துள்ள குழுவினர், பிரசவத்தின்போது அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்வது என்பது மருத்துவத்தில் முக்கியமான உயிர் காக்கும் நடவடிக்கை. ஆனால், தேவை இல்லாதபோது அறுவை சிகிச்சை செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில், சத்தீஸ்கரில் பேறுகால சிக்கல்கள் அதிகமாக இருப்பதும் தமிழகத்தில் அதிக அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. 2016-2021 காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த விகிதம் 10 மடங்கு உயர்வாக உள்ளது. நாடு முழுவதும் தனியாா் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் 49.7 விழுக்காடு அறுவை சிகிச்சை மூலம் தான் நடைபெறுகின்றன எனவும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்