குடியுரிமையைத் தற்காத்துக் கொள்ளும் நேரம் இது: கமல்ஹாசன்

1 mins read
bb60cf4b-b422-4a84-98a8-0add03d823e4
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். - படம்: தமிழக ஊடகம்

புதுச்சேரி: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவு திரட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் சென்று அங்கு திருமாவளவனை ஆதரித்துப் பேசி, வாக்கு சேகரித்தார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விழுப்புரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பரப்புரை செய்தார்.

முன்னதாக புதுச்சேரி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை நானும் மக்களில் ஒருவன் என்பதால் என் நிலைதான் அவர்களுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மாற்றம் என்பது இப்போது முக்கியமன்று. நம்முடைய குடியுரிமை, அரசியலமைப்பு உட்பட எல்லாவற்றையும் தற்காத்துக்கொள்ளும் நேரம் இது.

“கட்சி என்கிற வரையறைக் கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். இந்தியன் என்பதும் தமிழன் என்பதும்தான் இன்று எனக்கு முதன்மையானதாகத் தெரிகிறது. நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்,” என்று அவர் சொன்னார்.

முன்னதாக கமல்ஹாசனை வரவேற்க மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரண்டு, பேரணியாக அழைத்துச்செல்லத் திட்டமிட்டனர். ஆனால், தேர்தல் நன்னடத்தை விதிகளைச் சுட்டிக்காட்டிய காவல்துறையினர், பேரணியாகச் சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.

குறிப்புச் சொற்கள்