‘புதிய இந்தியா’வில் மின்னிலக்க வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

1 mins read
1394cfab-cb8f-47a3-bbfb-4edada60f174
படங்கள்: - தமிழக ஊடகம்

சென்னை: சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள் என்று பாஜக ஆட்சியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “மோடியின் ‘புதிய இந்தியா’வில் மின்னிலக்க வழிப்பறி. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

“சிறுக சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

“பெருநிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, பெருநிறுவன வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாகக் குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி மின்னிலக்க வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், “இது பணக்காரர்கள், கோடீசுவரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” என்றும் அவர் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்