மதுரை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது.
கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில் தமிழகம் வருகை தரும் அவர் மூன்று இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
அதற்காக வியாழக்கிழமை இரவு மதுரை வந்திறங்கும் அமித்ஷா, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்கிறார்.
பின்னர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு சிவகங்கை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவிற்கு ஆதரவு திரட்டுவார்.
அங்கு, பெரியார் சிலை முதல் அண்ணாசிலை வரை சாலையில் நடந்து சென்று தாமரை சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரிக்கிறார். அவருடன் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
அதன்பின், ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். தொடர்ந்து தென்காசியில் ஏறக்குறைய 2 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெறும் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். முன்னதாக மதுரையில் வியாழக்கிழமை இரவு பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பரப்புரைத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

