தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள்; வாக்களிக்க பணம் பெற்றால் நடவடிக்கை: சத்யபிரதா சாகு

2 mins read
000677ee-e9fa-4dac-a4ac-b1359e31d51c
சத்யபிரதா சாகு. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலத்தில் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்போர் மீதும் வாங்குவோர் மீதும் உரிய வழக்குகள் பதிவாகும் என எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 3.63 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை மாநிலம் முழுவதும் 3.35 லட்சம் பொது சுவர்களில் வரையப்பட்ட விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சத்யபிரதா சாகு, 1.25 லட்சம் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் அகற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் 6.23 கோடி வாக்காளர்களுக்கு ‘பூத் ஸ்லிப்’ எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 13.08 லட்சம் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அச்சீட்டுகள் வழங்கப்பட்டுவிடும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

“பதற்றமான வாக்குச்சாவடிகள் என்பன மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர், பொதுப்பார்வையாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.

“சாதி, இன ரீதியில் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் இருப்பின் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி பதற்றமானதாக கருதப்படுகிறது.

“தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென் சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன,” என்றார் சத்யபிரதா சாகு.

இத்தகைய வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள், கூடுதல் துணை ராணுவப் படையினர் நியமிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் கொடுப்பது குற்றம், அவற்றைப் பெறுவதும் குற்றம் என்பதால் இருதரப்பினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

“இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்வது, பணப்பட்டுவாடா செய்வது ஆகியவை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

“இம்முறை வாக்களிக்க பணம் கொடுத்ததாக புகார் ஏதும் வரவில்லை,” என்றும் சத்யபிரதா சாகு கூறினார்.

குறிப்புச் சொற்கள்