தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி பேரெழுச்சி பெறப்போகிறதோ என்ற கேள்விக்கு வித்திட்டுள்ளவர் அக்கட்சியின் 39 வயது தலைவர் கு. அண்ணாமலை.
ஐபிஎஸ் தேர்வில் வென்று காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் சிக்கமகளூர் வட்டார மலைப் பகுதியான பாபா புதன்கிரியில் சமயக் கலவரத்தை ஒடுக்கியதிலும் போதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும் அம்மாநில மக்களின் மனங்களை வென்ற அண்ணாமலை, நேர்மையான, துணிச்சலான அதிகாரி எனப் பெயர்பெற்றார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அவர், 2019ஆம் ஆண்டு வேலையை விட்டார். பாரதிய ஜனதா கட்சியில் சேரும் எண்ணத்தை தம் நண்பரான அப்போதைய கர்நாடக அமைச்சர் சி.டி. ரவியிடம் வெளிப்படுத்தியதை அடுத்து 2020 ஆகஸ்ட்டில், எடுத்த எடுப்பிலேயே தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குள்ளேயே 2021 சட்டமன்ற வேட்பாளராகக் களமிறங்கி, தோல்வியைச் சந்தித்தாலும் தேடிக்கொண்டிருந்த ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற உற்சாகத்தில் அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவியைத் தூக்கிக் கொடுத்தது பாஜக மேலிடம்.
எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதிலும் அரசியல் நகர்வுகளிலும் துணிச்சலையும் சாதுரியத்தையும் வெளிப்படுத்தி வரும் அவர், மாற்றுக் கட்சியினரை பாஜக வசம் இழுப்பதில் இயன்றவரை வெற்றி கண்டுள்ளார். இவரது அரசியல் முடிவுகளுக்கு மத்திய அரசு பக்கபலமாக இருப்பது அறிந்ததே.
இவரைப் போலவே அரசியல் பார்வையாளர்கள் உற்றுநோக்கும் மற்றோர் இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலின். துணிச்சலில் அண்ணாமலைக்குச் சற்றும் சளைத்தவர் அல்லர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார். அதிமுக உள்ளிட்ட எந்த ஓர் எதிர்க்கட்சியும் பிரதமர் மோடியை ஓர் அளவுக்கு மேல் விமர்சிக்கத் தயங்கும் நிலையில், ‘29 பைசா மோடி’ என்று மேடைக்கு மேடை கடுமையாக விமர்சிக்கிறார் உதயநிதி. தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பித் தரும் ஆகக் குறைந்த ஜிஎஸ்டி தொகையைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு பேசுகிறார்.
இவருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தல்தான் முதல் தேர்தல் களம். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வரும் உதயநிதியை ‘கஞ்சா நிதி’ என்று அண்ணாமலை வசைபாடுவதும் “அந்த ஆள் பெயரையெல்லாம் சொல்லாதீங்க...அந்த அளவுக்கு அவர் ஒர்த் இல்லை,” என்று உதயநிதி பதிலுக்குத் தாக்குவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சனாதன தர்மம் தொடர்பாக சர்ச்சைக் கருத்து வெளியிட்டதன் காரணமாக பல வழக்குகளைச் சந்திக்கின்றபோதிலும் பிரதமரையும் பாஜகவையும் தாக்கிப் பேசுவதை உதயநிதி நிறுத்தியபாடில்லை. அண்ணாமலை காவல்துறையை ஒதுக்கியதுபோல உதயநிதி திரைத்துறையை ஒதுக்கிவிட்டு அரசியல் களம் புகுந்தார்.
நெற்றி வியர்வை சிந்த கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக்கூடியவர் என்று திமுகவினர் உதயநிதியைப் புகழ்கின்றனர். வருங்காலத் தலைவர், வருங்கால முதல்வர் என்று அவர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

