மலரின் மலர்ச்சியா மலையின் எழுச்சியா

மலரின் மலர்ச்சியா மலையின் எழுச்சியா

4 mins read
93c03456-407b-431b-82bb-7dfc598a59e0
2014 - 2024 பத்தாண்டுகளில் நடைபெறும் மூன்றாவது மக்களவைத் தேர்தல் இது - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

தமிழக மக்களவைத் தேர்தலில் பேசப்படும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) உருவெடுத்து இருப்பதைக் காட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாநிலத்தில் பாஜகவின் வாக்கு வளர்ச்சியைக் கணக்கிட கடந்த தேர்தல்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

2014 - 2024 பத்தாண்டுகளில் நடைபெறும் மூன்றாவது மக்களவைத் தேர்தல் இது.

கடந்த இருமுறையும் வேறு கட்சிகளின் தலைமையில் பாஜக போட்டியிட்டது. 2014ல் 6 தொகுதிகளில் போட்டியிட்டு கன்னியாகுமரியில் மட்டும் வென்றது. 2019ல் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக அத்தனையிலும் தோற்றது.

2014 தேர்தலில் அதிமுகவுக்குச் சாதகமாக அலை வீசியது. எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணியின்றி முதல்முறை தனித்து களம் கண்ட அதிமுக 39 தொகுதிகளில் களமிறங்கி 37ல் வென்றது.

2019 தேர்தல் திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருந்தது. தேனியில் மட்டுமே வெற்றி வாய்ப்பை இழந்து 38 தொகுதிகளில் அந்தக் கூட்டணி வாகைசூடியது.

2024 தேர்தல் எந்த அணிக்குச் சாதமாக இருக்கும் என்னும் மர்மம் தொடருகிறது.

2019 வெற்றி தொடர வேண்டும் என்ற நோக்கில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை. பாரிவேந்தர், அணி மாறியதால் மிஞ்சிய ஒரு தொகுதியிலும் திமுகவே போட்டியிடுகிறது. மொத்தமாக திமுக மட்டும் 21 தொகுதிகளில் களமிறங்குகிறது.

கருத்துக்கணிப்புகள் வெவ்வேறு மாதிரியான முடிவுகளைத் தெரிவித்தாலும் இதுவரை வெளியான கணிப்புகளை ஒன்றிணைத்துப் பார்த்தால் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது தெளிவாகிறது.

பாஜகவின் பலத்தை அதிகரிக்கக்கூடியதாக இந்தத் தேர்தல் இருக்கும் என்பதையும் கணிப்புகள் மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றன. ஆயினும், அதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக்கப்படவில்லை.

கூட்டணி பலத்தை ஒரு காரணமாகச் சொல்லமுடியாது.

ஒன்பது கட்சிகளுடன் இணைந்து பாஜக பெரியதொரு கூட்டணியை அமைத்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது அந்தக் கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் பாமகவும் தமாகாவும்தான். மோடியை முதல்முறை பிரதமராக்கிய 2014 தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய பலம்பொருந்திய கட்சிகள் இருந்தன.

பாஜகவின் தனிப்பட்ட வளர்ச்சியும் தமிழ்நாட்டில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

பத்தாண்டுகளில் பாஜக எழுச்சி பெறவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. 2014 மக்களவைத் தேர்தலில் 5.56% வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, அதிமுக, பாமக துணையுடன் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 3.66% வாக்குகளையும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதே கூட்டணியில் களமிறங்கி 2.62% வாக்குகளையும் பெற்றது.

தேர்தலுக்குத் தேர்தல் பாஜகவின் வாக்கு விகிதம் சரிந்து வந்திருப்பதை இந்த விவரம் தெரிவிக்கிறது.

இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்த பாஜக, அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதைவிட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்னும் அணுகுமுறைக்கு மாறி இருக்கிறது. மக்களிடம் பாஜகவை மேலும் மேலும் பிரபலப்படுத்தி அதிக வாக்குகளைப் பெற வேண்டுமாயின் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற முடிவுக்கு அந்தக் கட்சி வந்திருப்பதையே நிலவரங்கள் உணர்த்துகின்றன.

பெரிய கட்சிகளின் ஆதரவு குறைவு என்பதையே வாய்ப்பாகக் கருதி, 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. தாமரைச் சின்னத்தில் 4 சிறிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதனால், பாஜகவின் வாக்கு விகிதம் 16 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.

23 தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளில் வென்றாலே பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றிதான். ஒரு மக்களவைத் தொகுதிக்கு மேல் வென்றதில்லை என்ற வரலாறு அப்போது உடைக்கப்படும். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நோட்டாவைவிட குறைவான வாக்குளைப் பெற்ற சின்னஞ்சிறிய கட்சியாக பாஜக இருந்தது என்னும் வரலாறும் மாற்றி எழுதப்படும்.

(2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (நோட்டா) என்பதற்கு 2,373 பேரும் பாஜகவுக்கு 1,417 பேரும் வாக்களித்திருந்தனர்.)

2024 தேர்தலில் பாஜகவின் வாக்குகள் 10 விழுக்காட்டைத் தாண்டினாலே அக்கட்சியின் எதிர்காலம் தாமரையாக மலரக்கூடும்.

2026 சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டியைக் கொடுக்கக்கூடிய கட்சியாக அது உருவாக இத்தேர்தல் ஓர் அடித்தளமாக அமையலாம்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அதிமுக துணையின்றி, முதன்முறை கூட்டணிக்குத் தலைமை ஏற்றிருப்பதும் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் களம் காண்பதும் பாஜகவின் துணிச்சலை உணர்த்துகின்றன. இந்தத் துணிச்சலைத் தோற்றுவித்தவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் தலைவராக இருந்து சந்திக்கும் முதல் தேர்தல் இது.

இருப்பினும், தமிழ்நாட்டில் நிகழப்போவது தாமரைச் சின்னத்தின் மலர்ச்சியா அல்லது அண்ணாமலை என்னும் ஓர் அரசியல் தலைவரின் எழுச்சியா என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்திவிடும்.

குறிப்புச் சொற்கள்