நெல்லை விரைவு ரயிலில் சோதனை; ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்: பாஜக வேட்பாளருக்குச் சிக்கல்

நெல்லை விரைவு ரயிலில் சோதனை; ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்: பாஜக வேட்பாளருக்குச் சிக்கல்

2 mins read
e8f2c4aa-84dc-4e47-a32b-0ff3fd92b733
நெல்லை விரைவு ரயிலில் பணம் கடத்த முயன்று கைதான மூவர், பறிமுதல் செய்யப்பட்ட பணம். - படங்கள்: ஊடகம்

சென்னை: நெல்லை விரைவு ரயிலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ரூ.4 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நெல்லை பகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இயங்கி வரும் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான தங்குவிடுதியில் நேற்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முன்னதாக, சனிக்கிழமை இரவு சென்னையில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரயிலை தேர்தல் பறக்கும் படையினர் ரசகியமாகக் கண்காணித்தனர்.

அந்த ரயிலில் கோடிக்கணக்கான பணம் கொண்டு செல்லப்படுவதாகவும் தேர்தல் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அத்தொகை கொண்டு செல்லப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சனிக்கிழமை நெல்லை விரைவு ரயில் தாம்பரம் நிலையத்தை வந்தடைந்தபோது பறக்கும்படை அதிகாரிகள் அதில் ஏறி அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது மூன்று பயணிகள் வைத்திருந்த பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.

மொத்தம் ரூ.3.99 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் பாஜகவின் நெல்லைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அந்தப்பணத்தை கொண்டுசெல்ல முயன்றதாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது என்றும் இதனால் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாஜகவினர் மேலும் பல கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளதுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பல கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

“எனவே பாஜக வேட்பாளர்கள் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்,” என ஆர்.எஸ்.பாரதி மேலும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம், பரிசுப்பொருள்கள் சிக்கியதாக தினகரன் ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்