சென்னை: பாஜகவைப் பார்த்து திமுகவும் அதிமுகவும் பயப்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்து உள்ளார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு எல்.முருகன் பதில் அளித்தார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டாக தமிழகத்துக்கு எதையுமே செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாரே என்று கேட்கப்பட்டதற்கு முருகன் பதிலளித்தார்.
“கடந்த 10 ஆண்டாக மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.11 லட்சம் கோடி கொடுத்து இருக்கிறது.
“குறிப்பாக, சென்னை-பெங்களூரு ஹைவே சாலை, மதுரவாயல்- சென்னை துறைமுக சாலை, சென்னை விமான நிலைய விரிவாக்கம், கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு, 1 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு இலவசம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு என்று பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி வழங்கப்பட்டு உள்ளது.
“இதை எல்லாம் தமிழ்நாடு அரசு மறைத்து வருகிறது.
“இந்தத் தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
“தமிழ்நாட்டில் இந்த முறைதான் மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்கு முன்பு திமுக, அதிமுக கட்சிகள் பாஜக குறித்து பேசியது கிடையாது.
“இந்த முறை பாஜகவைப் பற்றியே பேசுகின்றனர். பாஜகவைப் பார்த்து அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது.
“தமிழ்நாட்டில் எல்லாத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும். இளைஞர்கள், புதிதாக வாக்களிப்பவர்கள் அனைவருமே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
“திமுக, அதிமுக இடையே ரகசியக் கூட்டணி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் இந்த இரு கட்சிகளும் இணைந்துவிடும்,” என்று முருகன் தெரிவித்துள்ளார்.

