தமிழச்சியா தமிழிசையா

சென்னையிலிருந்து கு.காமராஜ்

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு என்று ஒரு பெருமை இருக்கிறது.

டி. டி. கிருஷ்ணமாச்சாரி(டிடிகே), பேரறிஞர் அண்ணா, முன்னாள் அதிபர் இரா. வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா பாலி, முரசொலி மாறன் போன்ற முக்கியப் பிரமுகர்கள் வென்ற தொகுதி இது.

இந்த தென்சென்னைத் தொகுதி திமுகவசம் அதிக முறை இருந்துள்ளது. மொத்தம் ஏழு முறை திமுக வென்றுள்ளது. அடுத்தபடியாக இதை காங்கிரஸ் ஐந்து முறை கைப்பற்றியுள்ளது. இங்கு அதிமுகவுக்கு இரண்டு முறை வெற்றி கிடைத்துள்ளது,

இந்த தென்சென்னை தொகுதியில்தான் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தெலுங்கானா ஆளுநர் பதவியிலிருந்து விலகி மீண்டும் அரசியல் களத்தில் புகுந்துள்ளார் அவர்.

“கஷ்டமான முடிவை இஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன்,” என்று அதற்கு அவர் விளக்கமும் அளித்திருந்தார்.

தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்போதே, “நாட்டுக்கு மோடி கியாரண்டி, தென்சென்னைக்கு அக்கா தமிழிசை கியாரண்டி,” என்று முழக்கமிட்டார்.

தென்சென்னையில் எப்படியாவது தாமரையை மலரச் செய்ய வேண்டும் அல்லது பூக்கவாவது செய்துவிட வேண்டும் என்ற இலக்கோடு, பல்வேறு தேர்தல் கணக்குகளைப் போட்டுத்தான் தமிழிசை சௌந்தரராஜனை பாஜக களத்தில் இறக்கியிருக்கிறது.

அத்தொகுதியில் உள்ள மயிலாப்பூர், தி.நகர் பகுதிகளில் பிராமண சமூகத்தினர் அதிகம் வசித்து வருவதால் அவர்களுடைய வாக்கு பாஜகவுக்குச் சாதகமாக அமையும் என்பது எதிர்பார்ப்பு. நாடார் சமூகத்தினரின் வாக்குகளும் பாஜகவுக்கு விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியால் வன்னியர் சமூகத்தினரின் வாக்குகளும் பாஜக பக்கம் திரும்பக்கூடும். கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கணிசமான வாக்குகள் கிடைக்கும் எனவும் பாஜக நம்புகிறது. 

தமிழிசையின் வரவால் தென்சென்னையில் தேர்தல் களமே சூடுபிடித்துள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன் தரப்பினர் உடனடியாக சென்னை மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்களை உள்ளடக்கிய ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதில் பல்வேறு பிரசார வியூகங்கள் வகுக்கப்பட்டன. சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெறுவார் என்று அறிவித்தார்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் தென்சென்னையின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர். இரண்டாவது முறையாக இங்கு அவர் போட்டியிடுகிறார்.

திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அதிகார பலமும் வலுவான கூட்டணியால் கூட்டணி பலமும் இவருக்கு இருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கழகம், ஆம் ஆத்மி எனப் பட்டியல் நீள்கிறது.

இதுவொரு வலுவானக் கூட்டணியாக பார்க்கப்படுகிறது. இது போதாதென்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இப்படி பாஜகவின் தமிழிசையா, திமுகவின் தமிழச்சியா என்ற போட்டிக்கு இடையே அதிமுக அணி சார்பில் ஜெ ஜெயவர்த்தன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், ஒரு மருத்துவர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன். 2014ல் நடைபெற்ற தேர்தலில் இதே தென்சென்னையில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனால், கடந்த (2019) தேர்தலில் தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் அவர் தோல்வியுற்றார்.

விட்டதைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற மனவுறுதியுடன் அவர் செயல்பட்டு வருகிறார். தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கொண்டு வந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள், இனிமேல் கொண்டு வரப்படுகின்ற நலத்திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிமுக தலைவர்களும் அவரது வாக்குச் சேகரிப்புக்குப் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், ஹாரூண் ரஷீத் (முஸ்லிம் கட்சி), இந்திய குடியரசுக் கட்சி (செ.கு.தமிழரசன்), புரட்சி பாரதம் (பூவை ஜெகன்மூர்த்தி) ஆகிய கட்சிகள் ஜெயவர்த்தனுக்குக் கூடுதலாக வாக்குகளைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரை ஆதரித்து ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய நடிகை கெளதமி, “எப்போதும் எந்த நேரத்திலும் உதவி செய்யத் தயாராக இருக்கும் ஜெயவர்த்தனுக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்,” என்று கேட்டுக் கொண்டார்.

வழக்கம்போல சீமானின் நாம் தமிழர் கட்சி இங்கு தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சியின் சார்பில் முனைவர் தமிழ்ச் செல்வி நிறுத்தப்பட்டுள்ளார். இம்முறை கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி விரும்புகிறது.

இந்நிலையில், தென்சென்னை மக்களின் ஆதரவு யாருக்கு என்பது வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதிதான் தெரிய வரும்.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!