தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி: விசிக உறுதி
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திற்கு தனிக்கொடி உருவாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும், மாநிலங்களுக்கு உரிய நிதியை அளிப்பதில் சரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் விசிக வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஜனநாயகத்துக்கு எதிரான சனாதன சக்திகள் அகற்றப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாஜக அரசை வீழ்த்துவதுதான் இத்தேர்தலில் விசிகவின் ஒற்றை இலக்கு என்றும் இதுதொடர்பாக திமுக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு விசிக துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
துபாய் சாய்பாபா கோவிலில் விஜய்: பரவிய வதந்தி
சென்னை: நடிகர் விஜய் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கோவிலில் வழிபடுவது, அங்குள்ள நிர்வாகிகளிடம் பேசுவது தொடர்பான காணொளியும் புகைப்படமும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் அவற்றைப் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய், பாஜகவை ஆதரிப்பதாக ஒரு தகவல் பரவியது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த புஸ்ஸி ஆனந்த் தமது சமூக ஊடகப் பதிவை நீக்கிவிட்டதாகவும் விஜய் கோவிலுக்கு சென்றது தொடர்பான புகைப்படங்களை அவர் நீக்கி விட்டதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
கிளி சோதிடரைச் சந்தித்த தங்கர் பச்சான்
கடலூர்: பாமக சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். திங்கள்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது கிளி சோதிடர் ஒருவரை வழியில் சந்தித்தார் தங்கர்பச்சான். பின்னர், அவருக்கு சோதிடம் பார்ப்பதாகக் கூறிய அந்த ஜோதிடர் தன்னிடம் உள்ள கிளி எடுத்துக் கொடுத்த சீட்டை வைத்து சில தகவல்களை தங்கர்பச்சானிடம் கூறினார்.
எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறிய சோதிடரிடம் நன்றி தெரிவித்த தங்கர்பச்சான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இது தொடர்பான காணொளி, புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.இதையடுத்து கிளி சோதிடரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்பு திருத்த சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

