சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக உள்ள திமுக பிரமுகர் சிற்றரசு வீட்டிலும் சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சதா உள்ளிட்ட சிலரும் கைதாகினர்.
ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய நண்பராக கருதப்படும் திரைப்பட இயக்குநர் அமீரிடம் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த 2ஆம் தேதி டெல்லியில் விசாரணை நடத்தினர்.
அப்போது அமீர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கை இரவு வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.
ஜாஃபர் சாதிக், அமீர், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் திமுக பிரமுகருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது அக்கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் உதயநிதியுடன் நெருங்கிய தொடர்புடைய சிற்றரசு அமலாக்கத்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது திமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என அக்கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில், தமது வீட்டில் சோதனை நடைபெறவில்லை என சிற்றரசு கூறியுள்ளார்.

