ஹவாலா மூலம் தமிழகத் தேர்தலுக்கு ரூ.200 கோடி; மலேசியாவிலிருந்து வந்தவர் கைது

2 mins read
b4108353-cd08-40b3-8209-82f6adfdb7d4
வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் கடுமையான அதிரடி நடவடிக்கைகளால் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. - படம்: இணையம்

சென்னை: தேர்தல் செலவுக்காக துபாயிலிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.200 கோடியை கடத்தி வர திட்டமிட்டவரை வருமானவரித்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில், துபாய், மலேசியாவில் செயல்படும் சட்டவிரோத பணப் பரிமாற்ற (ஹவாலா) கட்டமைப்புக் கும்பல் தமிழக அரசியல் கட்சிக்கு ஹவாலா பணப்பரிமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சென்னை வருமான வரித் துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த இந்திய நாட்டவரான வினோத் குமார் ஜோசப்பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவரிடமிருந்து கைப்பேசி, ஐ-பேட், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள் வினோத்குமாரின் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றங்களை ஆய்வு செய்தனர்.

அதில் அவர் துபாய், மலேசியா நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் தரகராக செயல்பட்டு வருவது தெரியவந்தது.

துபாயைச் சேர்ந்த செல்வம் என்பவர் மூலம் 200 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை துபாயிலிருந்து மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

அப்பு என்கிற விநாயகர் வேலன் ஹவாலா மூலம் கொண்டுவரப்படும் பணத்தை பிரதான அரசியல் கட்சிக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் வருமானவரித் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) அன்று வினோத்குமார் ஜோசப்பை மேல் விசாரணைக்காக, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னரே முழுத் தகவல்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ரூ.200 கோடி கொண்டு வர திட்டமிடப்பட்டது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் இதேபோல் வேறு ஹவாலா பணப் பரிமாற்றங்கள் நடைபெறுகிறதா என்பது பற்றியும் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்