வளர்ந்த இந்தியாவை தமிழகம் வழிநடத்தும் நேரம் இது: மோடி

2 mins read
aeb591d3-9fab-4287-b3ef-a200d69da5fb
வேலூர் பிரசார பொதுக்கூட்டத்தில் விரிவாக உரையாற்றினார் பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

வேலூர்: தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை கடுமையாகச் சாடினார். கொள்ளை அடிப்பதிலும் ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது என்றார் அவர்.

எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டு தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, வளர்ச்சிக்கான ஆண்டாக அமையட்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆங்கிலேயருக்கு எதிராக மிகப் பெரிய புரட்சியைச் செய்த மண் வேலூர் என்றார்.

வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாறு படைக்கப்போகிறது என்றார் அவர்.

21ஆம் நூற்றாண்டில் இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்றும் கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும். பொருளியலில் நாம் பலவீனமாக இருந்தோம்.

“மிகப் பெரிய முடிவுகள் எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை. இந்தியாவைப் பற்றி எங்கு பார்த்தாலும் மோசடி, ஊழல் செய்திகள் மட்டுமே வெளிவந்தன,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக இந்து தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியா தற்போது உலக வல்லரசாக மாறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது என்றார்.

விண்வெளி, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் மிகக் கடுமையாக உழைக்கிறது என்றும் இது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

“தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவப் பாதுகாப்பு உற்பத்தி மையங்கள் மூலமாக நடைபெறும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி இம்மாநிலத்தை மிகப் பெரிய அளவில் முன்னோக்கிக் கொண்டு செல்லும்.

“வளர்ந்த இந்தியாவை தமிழகம் வழிநடத்தக்கூடிய நேரம் இது. ஆனால் திமுக இன்னும் பழைய சிந்தனைகளோடு இருக்கிறது. ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் சொத்து.

“திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளையர்கள் முன்னேறவில்லை. தமிழகத்தை திமுக பின்னோக்கி அழைத்துச் செல்கிறது,” என்றார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்