அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் கட்டுக் கட்டாக ரூ.1 கோடி பணம்

அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் கட்டுக் கட்டாக ரூ.1 கோடி பணம்

2 mins read
8cb16683-22c3-4854-bcf3-46b67cfe0685
முன்னாள் அமைச்சரின் உறவினர் அன்பரசுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியின் உறவினர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் நான்கு நாள்களே எஞ்சியுள்ள நிலையில் வாக்காளர்களுக்குப் பணம், அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க 81 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை இரவு (ஏப்ரல் 12) திருச்சி அருகே எட்டரை கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவி திவ்யாவின் கணவர் அன்பரசு, அதிமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான பரஞ்சோதியின் உறவினர் என்று கூறப்படுகிறது.

அவரது வீட்டின் ஓர் அறையில் இருந்த 2 சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது, அவற்றில் ரூ.1 கோடிக்கும் மேல் பணம் கட்டுக் கட்டாக இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வருமான வரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நாமக்கல்லில் இருந்து தேர்தல் செலவுகளுக்காக மாவட்டச் செயலாளர் பரஞ்சோதிக்கு பெருமளவு பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் பிடிபட்டதைத் தொடர்ந்து திவ்யா, அவரது கணவர் அன்பரசு உள்ளிட்ட பலரிடம் காவல்துறையினரும் வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்குப் பதிவு நெருங்கும் நேரத்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணம் பதுக்கி வைப்பட்டு இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்