கன்னியாகுமரி: தன் வீட்டிற்குள் நுழைந்து மாதுளம்பழம் பறித்த சிறுவர் இருவரின் காலில் வீட்டு உரிமையாளர் சூடுவைத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே வள்ளவிளையைச் சேர்ந்தவர் ஷைஜி. இவருக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், சகோதரர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த கலா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து மாதுளம்பழம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு சினமடைந்த கலா, சிறுவர் இருவரையும் வீட்டிற்குள் கட்டிப்போட்டு, அவர்களின் காலில் சூடுவைத்ததாகச் சொல்லப்படுகிறது.
வலி தாங்க முடியாத சிறுவர் இருவரும் ‘வீட்டில் கூறினால் தாயார் அடிப்பார்’ என்று கருதி, மிதிவண்டியிலிருந்து தவறி விழுந்ததாக பொய் கூறினர்.
காயம் பெரிதாக இருந்ததால் சிறுவர்களின் தாயார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு காயத்தைப் பரிசோதித்த மருத்துவர், தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து, தாயார் சிறுவர்களிடம் துருவி துருவிக் கேட்டபோது அவர்கள் நடந்த சம்பவத்தைக் கூறி அழுதனர்.
இதுகுறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் சிறுவர்களின் தாயார் புகாரளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, புகாரைத் திரும்பப் பெறும்படி கலா தம்மை மிரட்டி வருவதாக அச்சிறுவர்களின் தாயார் தெரிவித்துள்ளார்.

