தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

2 mins read
269fea74-d763-4436-a3ee-654b31911db8
பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர். - படம்: தமிழக ஊடகம்

கோவை: குளிர்ச்சியான மலைப் பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களில் குடிநீர் இருப்பும் குறையத் தொடங்கியது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளிலும் நீர்மட்டம் குறைந்தது. ஆறுகள், நீரோடைகள், சிறு ஆறுகள் உள்ளிட்டவையும் வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமையும் (ஏப்ரல் 13) 2வது நாளாக மழை நீடித்தது.

குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பல இடங்களில் தேங்கியும் நின்றது. சில இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடைகளுக்குள் புகுந்த தண்ணீரை சனிக்கிழமை காலை ஊழியர்கள் அகற்றினர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்தக் கோடைமழை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது.

கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, பில்லூர் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்ததால், அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக பவானி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைந்துவிட்டது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத் தொடங்கியுள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 2 மாதங்களுக்குப் பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்