திருநெல்வேலி: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் தனக்கு எந்தவொரு அழைப்பாணையும் வரவில்லை என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) அளித்திருந்த பேட்டியில், “காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுகிறது. பிரசாரத்துக்குச் சென்றபோது எனது வாகனத்தில் மூன்று முறை சோதனை நடத்தி, என்னைப் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.
“ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக எனக்கு எந்த அழைப்பாணையும் வரவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதம் 6ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் போதிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைக் கொண்டு சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தைக் கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பிடிபட்ட சதீஷும் நவீனும் நயினாா் நாகேந்திரனுக்குச் சொந்தமான உணவகத்தில் வேலை செய்து வருவதும் ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த பெருமாள் என்பவர் நயினாா் நாகேந்திரனின் உறவினா் என்பதும் தெரியவந்தது. சதீஷிடம் இருந்து பாஜக உறுப்பினா் அட்டையைக் காவலர்கள் கைப்பற்றி உள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக வருமான வரித் துறையின் சிறப்புக் குழு விசாரணை நடத்தவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தாா்.