சிறப்பு நேர்காணல்

ராதிகா: வெற்றிக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது

விருதுநகரிலிருந்து கு. காமராஜ்

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், தாம் வெற்றி பெறுவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் உள்ள பர்மா காலனியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஏராளமான பெண்கள் வரவேற்றனர்.

அங்கு பேசிய ராதிகா, “உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறேன். எனக்கு வாக்களியுங்கள். கண்டிப்பாக 19ஆம் தேதி சென்று, 3வது இடத்தில் என்னுடைய பெயர் இருக்கும், அந்த பட்டனை அழுத்துங்கள்,” என்றார்.

அப்போது ஒருவர், “அக்கா, நீங்க சொல்லவே வேண்டாம். எங்கள் வாக்கு உங்களுக்குத்தான்,” என்று உரக்கக் கத்தினார்.

பின்னர் வேனில் இருந்தபடி தமிழ் முரசுக்கு பேட்டியளித்த ராதிகா சரத்குமார், இரண்டு அம்சங்கள் தனக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

“மூன்று வருடங்களாக செயல்படாத மாநிலக் கட்சி, ஒற்றுமையான சூழல் இல்லாத கூட்டணி இந்த இரண்டுமே என்னுடைய வெற்றிக்குச் சாதகமாக இருக்கின்றன. மாற்றம் வேண்டும் என்பது மக்கள் மனதில் தெளிவாக இருக்கிறது. இந்தியா முழுவதும் பிரதமர் மோடி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டிலும் வெற்றிபெற்று அவருடைய கரங்களை வலுப்படுத்த விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

மோடி அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுவது குறித்து பேசிய அவர், “அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் வருகிறது, எய்ம்ஸ் வருகிறது, தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், விவசாயிகளுக்கு ரூ.6,000, ஜவுளி தொழிலுக்கான மையம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்,” என்றார்.

மோடி ஆட்சியின் திட்டங்கள் அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தையும் கையில் கொடுத்தார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு இவருக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதியில்தான் கர்மவீரர் காமராஜர், மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோர் போட்டியிட்டு வென்று முதல்வர் ஆகியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தொகுதியில் ராதிகாவோடு மற்ற கட்சி வேட்பாளர்களும் களத்தில் இறங்கி இருக்கின்றனர்.

இண்டியா கூட்டணி சார்பில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், இரண்டு முறை வெற்றி பெற்று மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு வலுவான திமுக கூட்டணி பக்க பலமாக இருக்கிறது. இவருக்கென்று தனிச் செல்வாக்கு இந்தத் தொகுதியில் இருக்கிறது.

அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிகவின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.

தேமுதிகவுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு, அதிமுக கூட்டணியின் பலம் இவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கௌசிக் போட்டியிடுகிறார். இவருக்குச் சீமானின் செல்வாக்கு துணையாக உள்ளது.

வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு சில நாள்களே உள்ள நிலையில் தேர்தல் களத்தில் நான்கு வேட்பாளர்களும் சூறாவளியாகச் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்தத் தொகுதியில் பொதுமக்களில் சிலரிடம் பேசியபோது மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Remote video URL

தமிழ் முரசிடம் பேசிய விருதுநகர் மகேஸ்வரி, 48, “மாணிக்கம் தாகூர் என்ற எம்.பி. இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவரை அதிகமாக நான் பார்த்ததில்லை, இப்போது ராதிகா சரத்குமார் இங்கு போட்டியிடுகிறார். அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று கூறினார்.

லட்சுமி அம்மாள், 71, “வாக்குப்போட்டா யாராவது வெற்றி பெறுவார்கள். எங்கள் மனத்துக்குப் பிடித்தவருக்கு வாக்களிப்போம். அதெல்லாம் சொல்ல முடியாது,” என்று கூறிவிட்டார்.

சேசுராஜ், 65, “வரும்போது எல்லாருமே நான் செய்கிறேன் என்று சொல்கிறார்கள். பேருந்து நிறுத்தம் அமைக்கிறார்கள், வேறு என்ன செய்கிறார்கள்,” என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!