பழனிசாமி: தமிழகம் போதைப் பொருள்களின் கூடாரமாகிவிட்டது

பழனிசாமி: தமிழகம் போதைப் பொருள்களின் கூடாரமாகிவிட்டது

2 mins read
73d4a55b-1bbc-4f98-bac7-3b7fed313b05
பழனிசாமி. - படம்: ஊடகம்

அரியலூர்: தமிழகம் தற்போது போதைப் பொருள்களின் கூடாரமாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் கஞ்சா கிடைப்பதாக அவர் அரியலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது குறிப்பிட்டார்.

மேலும், மக்களுக்கு எதிராக மத்திய அரசுத் திட்டங்களை நிறைவேற்ற முற்பட்டால், அதை எதிர்க்கும் திராணி அதிமுகவுக்கு உள்ளது என்றார் அவர்.

“தமிழகத்தில் கஞ்சா கிடைக்காத இடமே இல்லை என்றாகி விட்டது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அண்மையில் திமுக நிர்வாகி ஒருவர் சிக்கி உள்ளார். மேலும் பலர் சிக்குவர்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது அதிமுக விசுவாசமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு எதிரான திட்டங்களை வகுக்கும்போது அதை அதிமுக மிகக் கடுமையாக எதிர்க்கும் என்றார்.

“அதற்கான பலம் அதிமுகவுக்கு உண்டு. எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்ப்போம், மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் பாணி,” என்றார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது சொத்து விவரங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள கோப்புகள் கண்டெடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அமலாக்கத் துறை பதிவிட்டுள்ளது. “கடந்த 9ஆம் தேதி சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஜாஃபர் சாதிக், அவருடன் தொடர்புள்ள இடங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு குற்ற ஆவணங்கள், சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,” என்று அமலாக்கத்துறையின் சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்