தேர்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: எச்சரிக்கும் அரசு

தேர்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: எச்சரிக்கும் அரசு

1 mins read
cad92dcd-ea1f-46e0-b0c1-c84cab181470
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. - படம்: ஊடகம்

சென்னை: மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து நிறுவனங்களும் விடுப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி மாநிலம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாக்களிக்கும் தினமான 19 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் துறை கூறியுள்ளது.

இவ்வாறு சிறப்பு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் இத்தகைய நிறுவனங்கள் குறித்து அரசிடம் புகார் அளிக்க தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த 70,000 ராணுவ வீரர்கள் தபால் மூலம் வாக்களிக்க உள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் பணிக்காக மேலும் 10 கம்பெனி ராணுவப் படைகள் தேவைப்படுவதாக தமிழக டிஜிபி கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்