தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதை 50 விழுக்காடு சாத்தியமாக்குவது அக்கட்சியின் சின்னம்தான் என்பார்கள் அனுபவசாலிகள்.
எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் இதை மெய்ப்பிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்தியாவில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ளது. அடுத்த இரு தினங்களில் தமிழகத்தில் பிரசாரங்கள் முடிவுக்கு வரும்.
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகளின் பிரசார முழக்கங்களைக் கேட்டுப் பழகிப்போன இந்தியக் குடிமக்கள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் எந்தவித இரைச்சலும் இன்றி, தங்களுடைய மக்கள் பிரதிநிதியாக யாரைத் தேர்வு செய்யலாம் என்று யோசித்து முடிவெடுக்க உள்ளனர்.
பிரசாரம் ஓய்ந்தாலும், தொண்டர்கள் தொகுதி முழுவதும் கட்டியுள்ள கட்சிச் சின்னம் அடங்கிய தோரணங்கள், கொடிகள், சுவர்களை ஆக்கிரமித்துள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை கடந்த நாள்களில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களின் மௌன சாட்சிகளாகக் கண்ணில்படும்.
“வாக்களிக்கும் கடைக்கோடி குடிமகனையும் நேரில் சந்தித்து வாக்கு கேட்பது ஒரு கட்சித் தலைவருக்கு சாத்தியமற்றது.
“ஆனால், அந்தத் தலைவருக்கும் கட்சிக்கும் ஆதரவாக இருக்கும் குடிமகன், வாக்களிக்கும் தருணத்தில் கட்சிச் சின்னத்தைப் பார்த்துதான் வாக்களிக்கிறான்,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த திரு. மகேஷ் பாலகிருஷ்ணன்.
பல்வேறு வடிவங்களில் உருவாகும் கொடிகள், சின்னங்கள்:
தொடர்புடைய செய்திகள்
பிரசாரத்துக்குச் செல்வோர் ஏந்திச் செல்லும் வகையில், சிறிய அளவிலான துணிக் கொடிகள், கைகளில் கொண்டு செல்லும் அட்டைக் கொடிகள், வாகனங்களில் பொருத்தும் கொடிகள் எனப் பல வகைகள் உண்டு. அனைத்திலும் கட்சிச் சின்னத்தையும் தவறாமல் இடம்பெறச் செய்கிறார்கள்.
கோவை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொடிகள் மட்டுமல்லாமல், கட்சிச் சின்னத்துடன் கூடிய குடைகள், டி-சட்டைகள், தொப்பிகள் எனப் பல்வேறு வடிவங்களில், பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
“பொதுவாக தேர்தல் எப்போது நடக்கும் என்பது உத்தேசமாகத் தெரிந்துவிடும். எனவே அதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்பே கொடிகள், சின்னங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
“திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் இந்தப் பணியில் முழுவீச்சில் ஈடுபடுகின்றன. எந்தெந்தப் பொருள்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை ஊகித்து, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த அருண்.
தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக் கொடிகள், சின்னங்கள் பொறித்த பொருள்களை விற்பனை செய்ததாகக் குறிப்பிட்ட இவர், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இருந்தும் ஏராளமானோர் திருப்பூர் நிறுவனங்களில் இருந்து இவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்வதாகச் சொன்னார்.
பருத்தி, மைக்ரோ கிளாத், வெல்வெட், பாலியஸ்டர் ஆகிய துணி வகைகளைக் கொண்டு பல்வேறு அளவுகளில் கட்சிக்கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.
எப்போதும் முன்னணி வகிக்கும் திமுக, அதிமுக:
சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக, அதிமுக கொடிகள் உள்ளிட்ட பொருள்களே அதிகம் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிகள் ஓரளவுக்கு விற்றுள்ளன. நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி உள்ளார். எனவே, அவரது கட்சியினர் மத்தியில் இப்பொருள்களுக்கு வரவேற்பு இல்லையாம்.
குறிப்பிட்ட சில கடைகளில் இப்பொருள்களை வாங்கினால்தான் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் சில அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஒரே கடைக்கு மட்டுமே செல்கிறார்கள்.
சுயேச்சைகளுக்கும் திருப்பூர் நிறுவனங்கள் உதவுகின்றன. அவர்களுக்குத் தேர்தல் ஆணையத்தால் உரிய சின்னம் ஒதுக்கப்பட்டதும் இயன்ற விரைவில் அவர்கள் கேட்கும் வடிவங்களில் சின்னத்துடன் கூடிய பொருள்களை தயாரித்து அளிக்கிறார்கள்.
இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது உருவங்கள் கொண்ட முகமூடிகள் விற்பனையில் முதல் இடம்பிடித்துள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முகம் பதிக்கப்பட்ட முகமூடிகளும் அதிக எண்ணிக்கையில் விற்பனையானதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
அரசியல் கட்சிகளின் கொடியில் காணப்படும் வண்ணங்களைக் கொண்டு துண்டுகள், அட்டைப் பதாகைகள், தொப்பி, தலைவர்களின் முகங்களைக் கொண்ட முகமூடிகள் ஆகியவற்றின் விற்பனை சிறப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
பிரசாரம் தொடங்குவதற்கு முன்பிருந்தே கட்சித் தொண்டர்கள் இங்குள்ள கடைகளுக்கு வந்து பல்வேறு கொடிகள், பதாகைகளை வாங்கிச் செல்வதாகவும் மதுரையில் உள்ள இத்தகைய கடைகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
நெகிழிக்குத் தடை; காகிதத்துக்கு வரவேற்பு:
முன்பெல்லாம் பருத்தி அல்லது பட்டுத் துணிகளில் கட்சிக் கொடிகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் நெகிழிப் பயன்பாடு அதிகரித்த நிலையில், தேர்தல் ஆணையம் தடை விதித்த காரணத்தால், காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தற்போது காகிதக் கொடிகள், தொப்பிகள் ஆகியவை அதிகம் விற்று வருகின்றன.
எனினும், மறைமுகப் பிரசாரத்துக்கு உதவும் இத்தகைய பொருள்களைத் தேர்தல் பிரசாரம் அனுமதிக்கப்பட்ட காலத்துக்குப் பிறகு பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பிரதமர், முதல்வர் தேர்வை தீர்மானிக்கும் சின்னங்கள்:
“வாக்குச்சீட்டில் கட்சித் தலைவர் அல்லது வேட்பாளரின் முகம் இருக்காது. வேட்பாளரின் பெயரும் அதனருகே கட்சிச் சின்னமும்தான் இடம்பெற்றிருக்கும். சின்னத்தை நினைவில் வைத்திருந்துதான் குடிமக்கள் தங்களின் பிரதிநிதிகளையும் நாட்டின் பிரதமரையும் மாநில முதல்வரையும் தேர்வு செய்கிறார்கள்.
“சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தாலே பாதி வெற்றி உறுதி என்பது முற்றிலும் சரி,” என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
60 வயதைக் கடந்துவிட்ட அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கியமான கட்சிகளின் தீவிர ஆதரவாளர்கள் இன்றளவும் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்துக் கவலைப்படுவதில்லை.
இரட்டை இலை, உதய சூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவருக்குத் தயக்கமின்றி வாக்களிப்போம் என்கிறார்கள்.
அதனால்தான் பிரசாரம், வாக்கு சேகரிப்பின்போது அரசியல் கட்சித் தொண்டர்கள் கட்சிச் சின்னத்தையும் கொடியையும் முன்னிறுத்துகிறார்கள் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

