தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அண்ணன் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தங்கையும் மாண்டார்

2 mins read
77473438-8f1e-4259-9f6b-e2c259a4b6e9
40 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணன்-தங்கை பாசம் தொடர்ந்துள்ளது. - படங்கள்: தமிழக ஊடகம்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது குளத்துப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 56). இவர் உசிலம்பட்டி தாலுகா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். இவருக்கு 2 அக்காவும் ஒரு தங்கையும் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது 3 சகோதரிகளில் இருவர் வெளி மாநிலங்களிலும், ஒரு தங்கை தேனியிலும் திருமணம் முடித்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

சிறு வயது முதலே அவரது பாசத்தை பங்கு போட்டு வந்த பிச்சையின் சித்தப்பா மகளான தங்கம்மாள்(50) இவரது கிராமத்தின் அருகிலேயே நக்கலப்பட்டியில் வசித்து வந்தார். அண்ணனுக்கு தேவையானதை தங்கையும், தங்கைக்கு தேவையானதை அண்ணனும் செய்து கொடுத்து அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது பாசத்தை பெருமடங்காகப் பகிர்ந்துள்ளனர். இப்படி 40 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணன்-தங்கை பாசம் தொடர்ந்துள்ளது.

இந்தநிலையில் பிச்சைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இந்த தகவல் அறிந்து அவரது உடலைப் பார்க்க தங்கம்மாள் வந்துள்ளார். அங்கு அண்ணனின் உடலைக் கட்டி அணைத்து அழுதபோது, தங்கம்மாளுக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அண்ணன் மடியிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தங்கம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

40 ஆண்டு காலம் ஒன்றாக இணைந்து இருந்த அண்ணனும், தங்கையும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்