வாக்குக்குப் பணம், பரிசு: நீதிபதி வேதனை

வாக்குக்குப் பணம், பரிசு: நீதிபதி வேதனை

1 mins read
9a338b1b-261c-4c9d-b1f5-4542e0cdf6b6
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. - படம்: ஊடகம்

மதுரை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம், பரிசு என ஏதேனும் ஒருவகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பில் காவல்துறையினர் தன்மீது பதிவுசெய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உசிலம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்தபோது, “தண்டனை குறைவாக இருப்பதால் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருள் தரும் பழக்கம் குறையவில்லை. தேர்தல் நேரத்தில் பணம் விநியோகம் செய்ததாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன,” என்று கூறி, நீதிபதி புகழேந்தி வருத்தப்பட்டார்.

அத்துடன், தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பான வழக்குகளைத் திறம்பட நடத்துவதற்கான வழிமுறையைக் கண்டறிய இந்த நீதிமன்றம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன, அவ்வழக்குகளின் நிலை என்ன என்று நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

அவற்றில், குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பில் பதிவு செய்யப்படும் வழக்குகளைக் கையாளும் விதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு அவர் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்