தயாநிதி மாறன்: ஜூன் 4ஆம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்

சென்னையிலிருந்து
கு. காமராஜ்

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், கடைசிவரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) வில்லிவாக்கத்தில் அவர் பிரசாரம் செய்தார். வாக்காளர்களை நோக்கி கைகூப்பியபடி வாக்குகளைச் சேகரித்த அவரைக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஆதரவாக சூழ்ந்திருந்தனர். அவர்களுடைய கைகளில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் கொடி பறந்துகொண்டிருந்தது.

பிரசாரத்தின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய திரு தயாநிதி, “இறுதிக்கட்ட பிரசாரத்தில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கு சென்றாலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது நம்பிக்கையோடு ‘கண்டிப்பாக இம்முறையும் திமுகவுக்குத்தான் வாக்களிப்போம், பெருத்த வெற்றியைத் தருவோம்’ என மக்கள் கூறுகிறார்கள். மத்திய சென்னை மட்டுமல்ல, திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும்,” என்று குறிப்பிட்டார்.

“அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கள்ள உறவு இருக்கிறது. இதைத்தான் எங்கள் முதல்வரும் தெரிவித்திருந்தார். தேர்தல் களத்தில் அதிமுகவினர் பாஜகவுக்கு வேலை செய்கின்றனர். பாஜகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி வேலை செய்கிறார். இதைத்தான் கள்ள உறவு என்று சொல்கிறோம்.

“பத்து ஆண்டுகளாக மோடியின் அரசாங்கம் மக்களை மதிக்காத அரசாங்கமாக இருக்கிறது. இந்தியாவை காப்பாற்றும் கூட்டணிதான் இண்டியா கூட்டணி. இந்த இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜூன் 4ஆம் தேதி அரசமைக்கப் போகிறது. இதுதான் மோடியின் கடைசி பதவிக்காலம்,” என்றார் தயாநிதி மாறன்.

இந்தியாவின் மிகச்சிறிய நாடாளுமன்றத் தொகுதிகளில் மத்திய சென்னை தொகுதியும் ஒன்று. திமுகவின் கோட்டைகளில் ஒன்று.

உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினா, சென்னை துறைமுகம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், தலைமைச் செயலகம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், உயர் நீதிமன்றம், மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற முக்கிய இடங்கள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு மூன்று முறை (2004, 2009, 2019) வென்றுள்ள தயாநிதி மாறன் 5வது முறையாகக் களம் காண்கிறார். இந்த முறை அவர் வெற்றி பெற்றால் நான்கு முறை வெற்றி பெற்ற சிறப்பைப் பெறுவார்.

இந்தத் தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா. கார்த்திகேயன் மத்திய சென்னையில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரசாரத்தை முடித்துள்ளார்.

கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 448,911 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர். சேம் பால் 147,391 வாக்குகளைப் பெற்றார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் 92,249 வாக்குகளைப் பெற்றிருந்தார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்துள்ளளது. இது, தயாநிதி மாறனுக்கு கூடுதல் பலம் சேர்ப்பது மட்டுமல்லாமல் வெற்றி வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர். கார்த்திகேயன் 30,886 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. 2021ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இந்த ஆறு தொகுதிகளையும் திமுக கைப்பற்றி தன் வசம் வைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!