கோவை: தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து மற்றும் பணத்தை மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகம் நடத்தி வருகிறார்.
தொழிலதிபரான அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் ரூ. 200 கோடி சொத்துகளுக்கு போலி ஆவணம் தயார் செய்தும், ரூ.100 கோடி பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.
தனது சொத்துகள் மோசடி செய்யப்படுவதை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மோசடிக்கு உடந்தையாக இருந்த வசந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரை முதலில் கைது செய்தனர்.
மோசடியில் முக்கிய குற்றவாளியான அஸ்வின்குமார் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவி ஷீலா, மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய 3 பேரை காவல்துறையினர் புதன்கிழமை (ஏப்ரல் 17) கைது செய்ததாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
குற்றவாளிகள் கோவை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

