தொகுதி நிதி குறித்து எடப்்பாடி பழனிசாமி பொய்க் குற்றச்சாட்டு: வழக்கு தொடுத்த தயாநிதி மாறன்

தொகுதி நிதி குறித்து எடப்்பாடி பழனிசாமி பொய்க் குற்றச்சாட்டு: வழக்கு தொடுத்த தயாநிதி மாறன்

1 mins read
41034075-5327-4622-ab23-a69abe180878
தயாநிதி மாறன். - படம்: ஊடகம்

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியை தாம் முறையாகச் செலவிடவில்லை என எழுந்துள்ள புகாரை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னை விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

தமது தொகுதி நிதியை 95% அளவுக்கு பயன்படுத்தி உள்ளதாகவும் ரூ.17 கோடி தொகுதி நிதியில் மீதமிருப்பது ரூ.17 லட்சம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 75% தொகையை சரிவரப் பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி அண்மைய தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சித்து இருந்தார்.

இதையடுத்து, அவருக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் தயாநிதி மாறன்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், அவதூறான பொய்க் குற்றச்சாட்டு என்பது தெரிந்திருந்தும் எடப்பாடி பழனிசாமி தம்மை விமர்சித்துள்ளதாகச் சாடினார்.

“அவருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை. அதனால்தான் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தோல்வி விரக்தியில் பேசியுள்ளார். சுய நினைவுடன்தான் அவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை,” என்றார் தயாநிதி மாறன்.

குறிப்புச் சொற்கள்