தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு; 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி

2 mins read
6e28b0b6-3b1b-4f10-81aa-de993fae3c74
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. - படம்: ஐஏஎன்எஸ்

இந்திய தேர்தல் விழாவின் ஒரு பகுதியாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதியில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள்.

புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 23ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 979 பெண்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 569 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 151 பேரும் உள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் 1.3 லட்சம் காவலர்களும் தேர்தல் பணியில் சுமார் 3,32,000 ஊழியர்களும் ஈடுபடுகின்றனர்.

இந்த விவரங்களை தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வியாழக்கிழமை (ஏப்ரல் 18) அன்று வெளியிட்டார்.

தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

முதல் முறையாக இம்முறை 10.92 லட்சம் பேர் வாக்களிக்க இருப்பதாக அவர் கூறினார்.

வாக்குப்பதிவு காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. இருந்தாலும் ஆறு மணி வரை வரிசையில் இருப்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.3 கோடி வாக்காளர்கள் (63 மில்லியன்) உள்ளனர். இவர்களில் பதினெட்டு முதல் 19 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 (1,09 மில்லியன்) லட்சம் பேர்.

தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகள் என்றும் 183 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்குப் பணம், இலவசங்கள் வழங்கப்படுவதைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூ.173.58 கோடி ரொக்கம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாக்களிப்பவர்கள் வாக்கு அட்டையைக் கொண்டு வர வேண்டும். வாக்கு அட்டை இல்லாதவர்கள் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட 12 அடையாள ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகள், 85 வயது மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை அழைத்து வருவதற்கு இலவச வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் சத்யபிரதா சாகு கூறினார்.

வாக்குப்பதிவுக்காக 1,58,568 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையே, கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒருமுறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் விழுவதாக புகார் எழுந்ததாக இந்து தமிழ் திசை வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்