பறக்கும் படையினர் சோதனை நீடிக்கும்: தேர்தல் ஆணையம்

பறக்கும் படையினர் சோதனை நீடிக்கும்: தேர்தல் ஆணையம்

2 mins read
2d39cfc4-1610-447d-90bc-24e178d8c190
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நான்கு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை நடவடிக்கைகள் நீடிக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதனால் வணிகர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

குறிப்பாக, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. கோடிக்கணக்கான ரொக்கப்பணம், நகைகள், பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு வந்த பிறகும் பறக்கும் படையினரின் சோதனை நடவடிக்கை நீடிக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே, தகுந்த ஆவணங்கள் இன்றி வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் 50,000 ரூபாய்க்கும் மேல் ரொக்கமாகக் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்ற நிலை நீடிக்க உள்ளது.

மேலும், அண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களைச் சுற்றி தமிழக காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை லயோலா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் நான்கு அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்