தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தேர்தல் பணியாற்றியதற்கு முறையாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்களும் முன்னாள் காவல்துறையினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தல் பணியின்பொருட்டு ஓய்வு பெற்ற காவலர்களும் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், தேர்தல் பணிபுரிந்த தங்களுக்கு பேசியபடி ஊதியம் வழங்கக்கோரி தஞ்சை ஆயுதப்படை மைதானம் முன்பு சாலையில் அமர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ”ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் என 100க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டோம்.
“நான்கு நாள் வேலைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,000 முதல் 1,250 வரை ஊதியம் தருவதாகவும் கூறினர். ஆனால், நாங்கள் மூன்று நாள் மட்டுமே பணிபுரிந்ததாகக் கூறி மூன்று நாள் ஊதியத்தை மட்டுமே வழங்கியுள்ளனர். ரூ.4 ஆயிரம் வழங்குவதாகக் கூறிவிட்டு, ரூ.3 ஆயிரம் மட்டுமே அதிகாரிகள் வழங்கியுள்ளனர்,” என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

