வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னை சென்ற மாணவி

வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னை சென்ற மாணவி

1 mins read
d5165776-d408-4db9-9752-89b250e7a038
தம் தாயாருடன் மாணவி புவியரசி, 18. - படம்: தமிழக ஊடகம்

புதுச்சேரி: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க ரூ.50,000 (S$816) செலவழித்து சிங்கப்பூரில் இருந்து சென்னைக்குச் சென்றுள்ளார் புதுவையைச் சேர்ந்த புவியரசி.

18 வயது நிரம்பிய இவர் புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.

தொழில் அதிபரான புவியரசியின் தந்தை ஆறுமுகம் பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவரது மனைவி மாலதி, கல்லூரி மாணவியான மகள் புவியரசி இருவரும் கிருமாம்பாக்கம் பகுதி வாக்காளர்களாக நீடிக்கின்றனர்.

தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இருவரும் ரூ.50,000 செலவுசெய்து விமானம் மூலம் சென்னை சென்று, பின்னர் காரில் புதுவை சென்றடைந்தனர்.

“என் தந்தை படித்த பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதன்முறையாக வாக்களித்தேன். அந்தப் பள்ளியைப் பார்த்தது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. வாக்களித்தவுடன் என் தாயாரும் நானும் சிங்கப்பூர் திரும்பினோம்,” என்றார் அவர்.

“விமானத்தில் சென்று அப்பா படித்த பள்ளியில் முதல் வாக்கைச் செலுத்தியது வாழ்வில் மறக்க முடியாதது,” என்று புவியரசி தெரிவித்தார். 

சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் பணிபுரியும், படிக்கும் இந்திய நாட்டவர்கள் பலரும் வாக்களிப்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊருக்குச் சென்று திரும்பியுள்ளதாக இந்திய, தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தகைய சிலரின் நேர்காணல்களும் ஊடகங்களில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்