வாக்காளர்களுக்கு இடையூறு; விஜய் மீது காவல்துறையிடம் புகார்

1 mins read
da7c3233-0e09-4654-839b-c6ab47b91b86
வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியைவிட்டு பாதுகாப்புடன் வெளியேறும் நடிகர் விஜய். - படம்: தினத்தந்தி

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி தமிழக அரசியலில் இரு மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

அதையடுத்து, விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்வம் எனும் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்டவர்களுடன் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் விஜய் சென்றதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, தாம் வாக்களித்த புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட விஜய், “நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” எனப் பதிவிட்டார்.

விஜய்யின் இடது கையில் சிறிய காயம் இருந்ததை அந்தப் படங்களில் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்