பசுமைப் பரப்பை அதிகரிக்க 10,000 குறுங்காடுகள்: தமிழக அரசு உத்தரவு

2 mins read
65d4cb96-f1a7-4ae2-9951-379870132fc0
இயன்ற விரைவில் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளது தமிழக அரசு. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக ரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்கப்பட உள்ளது.

இத்திட்டத்துக்குத் தொழில் நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க இருப்பதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில், வனம் மற்றும் பசுமைப் பரப்பு என்பது 23.8 விழுக்காடாக மட்டுமே உள்ளது.

இதையடுத்து பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் 2030 - 31ஆம் நிதி ஆண்டுக்குள், மாநிலத்தின் பசுமைப் பரப்பை 33 விழுக்காடாக அதிகரிக்க, தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

அவற்றுள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியோடும் தொழிற்சாலைகளின் பங்களிப்புடனும் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

“இதற்கு, அரசுப் புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகளின் கரைகள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் என நிலங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்நிலங்களில் வேம்பு, ஆலமரம், அரச மரம், ஆய மரம், இலுப்பை, மா, கொய்யா, நாவல், பூவரசு, மகிழம், வில்வம் உட்பட 21 வகையான நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

“வனத்துறை மேற்பார்வையுடன் நடப்படும் பகுதியைச் சுற்றிலும் கம்பி வேலி பாதுகாப்பு, நீர் வசதி மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் நியமித்து, சிறிய வனமாக உருவாக்க வேண்டும்,” என சுற்றுச்சூழல்-வனத்துறை தெரிவித்துள்ளதாக தினமலர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
காடுகள்வனத்துறைசுற்றுச்சூழல்

தொடர்புடைய செய்திகள்