துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை அகற்ற கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாததால் ஏப்ரல் 19ஆம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
இதனால், 931 வாக்குகள் கொண்ட கிராமத்தில் 9 வாக்குகள் மட்டும் பதிவானது. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்த முயன்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ, சண்முகையா ஆகியோருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமத்திற்குள் ‘ஸ்கார்பியோ’ காரில் ஆயுதங்களுடன் வந்த எட்டுப் பேரை காவல்துறையினர் பிடித்து வேனில் அழைத்துச் சென்றனர். அந்த வேனை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் உட்பட 50 பேர் மீது புதுக்கோட்டை காவல்துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. எல்லநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., விஜயமூர்த்தி புகாரின்பேரில் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதேபோல, அந்த கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் புகாரின்படி காரில் ஆயுதங்களுடன் வந்த மகாராஜன், 25, தங்கபாண்டி, 31, சித்திரைவேல், 26, ராமர், 24, உள்ளிட்ட எட்டுப் பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது அவ்வட்டார மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

