தமிழகம் முழுவதும் ஒரே ஆண்டில் 1.12 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

1 mins read
3ec45aa9-dfd2-4f68-bc9e-fa8b7f8a6b32
தமிழகம் முழுவதும் பல கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு காவேரி கூக்குரல் அமைப்பு திட்டமிட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால் கடந்த நிதியாண்டில் ஒரு கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 630 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், தமிழகத்திலும் புதுவை மாநிலத்திலுமாக சுமார் 28,000 ஏக்கர் பரப்பளவில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இது ஓர் உலக சாதனை என்றும் தெரிவித்தார்.

உலக பூமி தினமான ஏப்ரல் 22ஆம் தேதி காவேரி கூக்குரல் இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய தமிழ்மாறன், இந்த இயக்கம் 26 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதை என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரித்தல், நதிகளுக்குப் புத்துயிர் அளித்தல், விவசாயிகளின் பொருளியல் தரத்தை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது என்றார் தமிழ்மாறன்.

“தமிழகத்தில் 39 இடங்களில் விநியோக நர்சரிகளை நடத்தி வருகிறோம். இங்கு தேக்கு, செம்மரம், சந்தனம், ரோஸ்வூட் உட்பட 29 வகையான விலை உயர்ந்த மரக்கன்றுகளை ரூ.3 என்ற மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

“மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கும் விதமாக, அவர்களே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கி வருகிறோம்,” என்றார் தமிழ்மாறன்.

காவேரி கூக்குரல் இயக்கத்தில் மொத்தம் 130 களப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

குறிப்புச் சொற்கள்