சென்னை: நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பிரதமரின் சூரியவீடு இலவச மின்சாரம் திட்டத்தின்கீழ்’ பயனடைய தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
ஒரு கோடி வீடுகளுக்கு இலவச சூரியசக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, ‘பிரதமரின் சூரியவீடு இலவச மின்சாரம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தத் திட்டத்தை மாநில மின்வாரியம் செயல்படுத்துகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ், அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு சூரியசக்தி மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் இதுவரை ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே பயனடைந்துள்ளதாக தினகரன் ஊடகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் மத்திய அரசுத் திட்டப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்உற்பத்திக்கான சோலார் தகடுகள் (பேனல்) விற்பனை செய்யும் விநியோகிப்பாளர்கள் சென்னை, கோவையில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் சோலார் தகடு விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

