திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை: உணவகங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை: உணவகங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

2 mins read
768bf8b0-adbe-4040-bf61-5f76c5c2a830
தமிழக அரசு. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளளது.

திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவு வகைகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு கண்பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து உள்ளதாக தமிழக உணவு பாதுக்காப்புத் துறை எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

அண்மையில் கர்நாடகாவில் ‘ஸ்மோக் பிஸ்கேட்’ என்ற உணவு வகையைச் சாப்பிட்ட சிறுவனுக்கு சில நொடிகளில் வாய் எரிச்சல் ஏற்பட்டது. அச்சிறுவன் வாய் எரிச்சலால் துடிக்கும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்பட்ட உலர்ந்த ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு எரிச்சல் ஏற்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், டெல்லி அருகே உள்ள குருகிராம் உணவகத்தில் உலர்ந்த ஐஸ் கலந்த உணவைச் சாப்பிட்ட ஐந்து இளையர்கள் ரத்த வாந்தி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழக உணவு பாதுகாப்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திரவ நைட்ரஜன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘ஐஸ்க்ரீம்’, ‘ஸ்மோக் பிஸ்கேட்’ உள்ளிட்ட உணவுப் பொருளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றத்தைப் புரிவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலர்ந்த ஐஸ் கலந்த பொருள்களை விற்கக்கூடாது என்றும் சிறார்களுக்கு உலர்ந்த ஐஸ் கொடுக்கக்கூடாது என்றும் உணவு பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

இதனால் சிறார்களுக்கு பார்வைக் குறைபாடு, பேச்சு பறிபோகும் சூழல் ஏற்படுவதாகவும் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள உணவகங்கள் பொருட்காட்சிகளில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் விற்கபடுகின்றனவா என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்