12 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

12 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

2 mins read
f0a2f242-5f50-4218-9dfb-c9847c5021f0
மேட்டூர் அணையின் பண்ணவாடி பரிசல் துறை நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் நந்தி சிலை தற்போது தண்ணீருக்கு வெளியே நன்றாக தெரிகிறது. - படம்: ஊடகம்

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது கவலை அளிப்பதாக உள்ளது. அதாவது கடந்தாண்டில் இருந்த நீர் இருப்பைவிட இந்த ஆண்டு அணை நீர் இருப்பு 50 விழுக்காடு குறைந்துள்ளது.

எனவே தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கினால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

எனவே, இப்போது உள்ள அணையின் நீர் இருப்பை கணக்கிட்டு பார்க்கும்போது குடிநீர் தேவையை முற்றிலும் பூர்த்தி செய்ய முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மேட்டூர் அணையின் மூலம் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. 24.04.2024 காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.32 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

புதன் கிழமை மாலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக சரிந்த நிலையில், அணையின் பண்ணவாடி பரிசல் துறை நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் நந்தி சிலை தற்போது தண்ணீருக்கு வெளியே நன்றாக தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்