திண்டுக்கல்: பொதுப் பேருந்துகளில் மின்னியல் பெயர்ப்பலகைகளை தமிழ அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பழனியில் இருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று வந்தது. அந்தப் பேருந்து பழனி, பொள்ளாச்சிக்குச் செல்லும் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் அந்தப் பேருந்தின் மின்னியல் பெயர்ப்பலகையில் புரிந்துகொள்ள முடியாத வகையில் வேற்று மொழி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பேருந்து ஓட்டுநரிடம் பேருந்து செல்லுமிடம் குறித்து உறுதி செய்த பிறகு பயணிகள் அந்தப் பேருந்தில் ஏறினர்.
மின்னியல் பெயர்ப் பலகை செயல்படுவதற்கான மென்பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது. எனவே, அதனை இயக்கும்போது முதலில் சீனமொழியே வரும். அதன்பிறகு ஓட்டுநர் அதைத் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும்.
ஆனால் அந்தப் பேருந்தை இயக்கிய டிரைவரும், ஓட்டுநரும் மின்னியல் பலகையை ‘ஆன்’ செய்து விட்டு அப்படியே விட்டு விட்டனர். தமிழ்மொழியை பெயர்ப் பலகையில் மாற்றவில்லை. இதுதான், குழப்பத்துக்குக் காரணம் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

