தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெப்பத்திலிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற அறிவுறுத்து

1 mins read
141b6a63-0ca2-45b7-b05e-d7c8a545a702
கோடை வெயிலிலிருந்துத் தன்னைப் பாதுகாத்துகொள்ள தலையில் நிழற்குடை அணிந்துள்ள தொழிலாளர். - படம்: தினத்தந்தி

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கத்தை விட பகலில் 3 டிகிரி முதல் 5 டிகிரி வரையிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. பகலில் கொளுத்தும் வெயிலில் அனல் காற்று வீசியதால் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வருவதால் வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான உரிய வசதிகளை செய்து தருமாறு தொழிற்சாலைகள், கட்டடப்பணி, கல்-குவாரி, சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குத் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

காலையில் விரைவாக பணியை தொடங்கி, மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என்றும் மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும் என்றும் பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நிறுவனங்களை இயக்குநரகம் கேட்டுகொண்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். வெப்பம் அதிகமான துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்