சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

1 mins read
8523d7de-26fa-4900-a0da-626a2de74942
கோப்புப் படம் - ஊடகம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டது.

விமானநிலையத்தில் உள்ள கழிவறையை விமான நிலைய ஊழியர்கள் தூய்மை செய்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த குப்பைத் தொட்டி ஒன்றில் பொட்டலம் ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளனர். இதுகுறித்து விமான நிலைய மேலாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த பொட்டலத்தில் வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் 4 தங்கக் கட்டிகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்தப் பொட்டலத்தை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 4 தங்கக்கட்டிகளும் ஒரு கிலோ 250 கிராம் எடை இருந்தன. அதன் அனைத்துலக மதிப்பு ரூ. 85 லட்சம் என அதிகாரிகள் கூறினர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்